கடலூரில்: ஹவாலா பணம் விவகாரம்; 3 ஏட்டுகள் பணி நீக்கம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


கடலூரில்: ஹவாலா பணம் விவகாரம்; 3 ஏட்டுகள் பணி நீக்கம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 3:45 AM IST (Updated: 5 Nov 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஹவாலா பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக 3 ஏட்டுகளை பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர், 

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு வேப்பூர் போலீஸ் நிலைய ஏட்டு ரவிக்குமார், கம்மாபுரம் போலீஸ் நிலைய ஏட்டு செல்வராஜ், சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலைய ஏட்டு அந்தோணிசாமிநாதன் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த பஸ்சில் வந்த ஒருவர், கொண்டு வந்திருந்த பையில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம் இருந்தது. அதை எண்ணிப்பார்த்தபோது ரூ.50 லட்சம் இருந்தது. ஆனால் அந்த பணத்தை கைப்பற்றிய போலீஸ் ஏட்டுகள் ரவிக்குமார், செல்வராஜ், அந்தோணிசாமிநாதன் ஆகிய 3 பேரும் ரூ.20 லட்சத்தை எடுத்து விட்டு மீதி பணத்தை கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக 3 பேர் மீதும் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்தது. இதில் 3 ஏட்டுகளும் கூட்டாக சேர்ந்து பணத்தை எடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 3 பேரையும் பணியில் இருந்து நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேபோல் சிறுபாக்கம் போலீஸ் நிலைய போலீஸ்காரர் அஸ்வின்டேவிட் என்பவர் குடிபோதையில் அடிக்கடி பணிக்கு வந்தார். இதையடுத்து அவர் மீதும் துறைரீதியான விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் அவரையும் பணிநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story