யவத்மாலில் புலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி கடும் எதிர்ப்பு


யவத்மாலில் புலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 5:00 AM IST (Updated: 5 Nov 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

யவத்மாலில் பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மராட்டிய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

மும்பை,

யவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை வேட்டையாடிய பெண் புலி அவ்னியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இரண்டு 10 மாத குட்டிகளின் தாய் புலியான அவ்னியை, துல்லியமாக சுடும் திறமைகொண்ட ஆஷ்கர் அலி சுட்டுக்கொன்றார்.

இந்த சம்பவத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

யவத்மாலில் பெண் புலி அவ்னி கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இது நேரடியான குற்ற சம்பவம் ஆகும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மாநில வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார் புலியை கொல்ல ஆணை வழங்கியுள்ளார்.

இந்த கொடூரமான கொலையால் தாயை இழந்த குட்டிகள் மரணத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே புலி கொல்லப்பட்டது குறித்து வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

வனத்துறையை சேர்ந்த யாருக்கும் புலியை கொல்லும் எண்ணம் இல்லை. கடந்த 3 மாதமாக 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் எப்படியாவது பெண் புலி அவ்னியை உயிருடன் பிடிக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் முயற்சியின்போது வனத்துறை ஊழியரை தாக்க முயன்ற காரணத்தினால் தான் வேறுவழியின்றி புலி சுட்டு கொல்லப்பட்டது.

நாங்கள் மனிதர்களை சாக விட்டுவிட்டு விலங்குகளை பாதுகாக்க விரும்பவில்லை.

இவ்வாறு அதில் சுதிர் முங்கண்டிவார் கூறியுள்ளார்.

Next Story