நீர்ப்பாசன ஊழல் வழக்கில் அஜித்பவார் எந்த நேரத்திலும் கைது ஆவார் : பா.ஜனதா தலைவர் தன்வே


நீர்ப்பாசன ஊழல் வழக்கில் அஜித்பவார் எந்த நேரத்திலும் கைது ஆவார் : பா.ஜனதா தலைவர் தன்வே
x
தினத்தந்தி 5 Nov 2018 5:04 AM IST (Updated: 5 Nov 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பாசன ஊழல் வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் 1999-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. அப்போது நீர்ப்பாசன துறை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் மற்றும் அக்கட்சியின் மந்திரிகள் வசம் இருந்தது.

இந்த காலகட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவதில் ரூ.72 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் காரணமாக தனது துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு அஜித் பவார் தள்ளப்பட்டார். இந்த ஊழல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே நேற்று கூறுகையில், “நீர்ப்பாசன வழக்கில் போலீசார் அஜித்பவாரின் வீட்டு வாசல்படி வரை நெருங்கிவிட்டனர். தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் அவர் உள்ளார். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம்” என்றார்.

இவரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தனஞ்செய் முண்டே கூறியதாவது:-

இது தேர்தல் சூழ்நிலையில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சியாகும். நீர்ப்பாசன மோசடி குறித்த விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் அஜித்பவாருக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story