ஒலி, காற்று மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் கலெக்டர் அறிவுரை


ஒலி, காற்று மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 5 Nov 2018 4:00 AM IST (Updated: 5 Nov 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியினை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை மற்றும் விழா காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வண்ணம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகை குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியினை கொண்டாடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story