இரணியல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தது


இரணியல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையை மூட வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி அந்த பகுதி மக்கள் திரண்டு மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அந்த கடை திறக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கடைக்குள் இருக்கும் மதுபாட்டில்களை முழுமையாக அகற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி பொதுமக்கள் கூடாரம் அமைத்து இரவு அங்கேயே தங்கினர். மேலும் சமையல் செய்து சாப்பிட்டு அந்த டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. நேற்று 4-வது நாளாகவும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மேலும் டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இதையடுத்து கல்குளம் தாசில்தார் சஜித், டாஸ்மாக் மேலாளர் சம்பத், கல்குளம் துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா, ராஜமோகன், வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அதிகாரி எழில் அக்னஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மாலை 4 மணியளவில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள், நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்குள் கடையில் இருக்கும் மதுபாட்டிகள் மற்றும் அனைத்து பொருட்களும் அப்புறப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மதுக்கடைக்கு எதிராக கடந்த 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story