ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு மோட்டார்சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது


ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு மோட்டார்சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2018 1:21 AM IST (Updated: 6 Nov 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் தடைசெய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இதனால் அருகே உள்ள ஆந்திராவில் இருந்து சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை ஊத்துக்கோட்டைக்கு கடத்தி வருவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நத்தியானந்தம், நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வடமாநில வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தார்.

வாலிபர் கைது

அதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து குட்கா மற்றும் அவற்றை கடத்தி வர பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்பதும், ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து, இங்கிருந்து சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து சர்தாராமை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story