சுற்றுலா வந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி போலீஸ்நிலையம் முன் தர்ணா -பரபரப்பு


சுற்றுலா வந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி போலீஸ்நிலையம் முன் தர்ணா -பரபரப்பு
x
தினத்தந்தி 6 Nov 2018 3:45 AM IST (Updated: 6 Nov 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரிக்கு, சுற்றுலா வந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்முன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாகாலாந்தை சேர்ந்த 3 பேர் ஆசிரியைகளாக பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து 3 ஆசிரியைகளும் நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மாலை 3 மணியளவில் வாவத்துறை கடற்கரை பகுதியில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென ஒரு ஆசிரியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த ஆசிரியைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்கள் அந்த வாலிபரை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை வாலிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் சில்மிஷம் செய்ததாக வழக்குப்பதிவு செய்வதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 3 ஆசிரியைகளும் தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். அதைதொடர்ந்து பள்ளியில் இருந்து மேலும் 3 ஆசிரியைகள் கன்னியாகுமரிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள், மாலை 4 மணியளவில் அந்த வாலிபர் மீது பாலியல் பலாத்காரம் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ்நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் இரவு வரை நீடித்தது.

இதற்கிடையே அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Next Story