திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் மும்முரம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் மும்முரம்
x
தினத்தந்தி 6 Nov 2018 5:15 AM IST (Updated: 6 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி விழா. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு யாசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

மதியம் 12.45 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளலும், தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுதலும், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

13-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுதலும், தீபாராதனையும் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

14-ந்தேதி இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 15-ந்தேதி சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டின பிரவேசம் நடைபெறும்.

16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

கந்தசஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகள் கோவிலில் மும்முரமாக நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்கும் வகையில், 9 இடங்களில் இரும்பு தகடாலான தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணியும், கோவில் கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் தற்காலிக மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குற்ற சம்பவங்களை தடுக்க கடற்கரை பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story