மதுரை ரெயில்வே கோட்டத்தில்: இ-டிக்கெட் மோசடியை தடுக்க தனிப்படை


மதுரை ரெயில்வே கோட்டத்தில்: இ-டிக்கெட் மோசடியை தடுக்க தனிப்படை
x
தினத்தந்தி 5 Nov 2018 9:45 PM GMT (Updated: 5 Nov 2018 10:34 PM GMT)

மதுரை ரெயில்வே கோட்டத்தில் இ-டிக்கெட் மோசடியை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், 


தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ரெயில், பஸ்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதேநேரம் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால், குடும்பத்துடன் செல்பவர்கள் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் தவித்தனர். இதை பயன்படுத்தி கொண்டு சிலர் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தட்கல் முறையில் இ-டிக்கெட்டுகளை எடுத்து அதிகவிலைக்கு விற்பதாக புகார்கள் வந்தன.

இதற்கிடையே தீபாவளி பண்டிகைக்கு விடுமுறைக்கு சென்றவர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வரத்தொடங்குவார்கள். அந்த நேரத்தில் ரெயில் டிக்கெட் இல்லாதவர்களை குறிவைத்து, இ-டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு சிலர் முயற்சி செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை கண்காணித்து தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் 5 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தனிப்படையினர் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது இ-டிக்கெட்டில் உள்ள இணையதள முகவரியுடன், டிக்கெட் வைத்திருக்கும் நபரின் முகவரியை ஒப்பிட்டு பார்த்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்கும் நபர்களையும் கண்காணித்து வருகின்றனர். 

Next Story