அறச்சலூர் அருகே குடோனில் தீ விபத்து: திருமண அலங்கார பொருட்கள் எரிந்து நாசம்
அறச்சலூர் அருகே குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமண அலங்கார பொருட்கள் எரிந்து நாசமாகின.
அறச்சலூர்,
அறச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறையை சேர்ந்தவர் மணி (வயது 62). இவருடைய திருமண மண்டபம் அந்த பகுதியில் உள்ளது. இந்த திருமண மண்டபத்துக்கு எதிரே உள்ள ஒரு குடோனில் திருமண அலங்கார பொருட்களை வைத்து மணி வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென்று குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மணிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் மணி ஓடோடி வந்து குடோனை திறந்து பார்த்தார். அப்போது குடோனில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
இதுபற்றி அறிந்ததும் ஈரோடு, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திருமண அலங்கார பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story