தீபாவளி பண்டிகையையொட்டி: கடைசி நாளில் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


தீபாவளி பண்டிகையையொட்டி: கடைசி நாளில் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கடைசி நாளில் பொருட்கள் வாங்க நேற்று திருப்பூரில் கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பூர், 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகினார்கள். தீபாவளி பண்டிகையன்று புத்தாடை உடுத்தி மகிழ்வதற்காக தங்களுக்கு தேவையான ஆடைகளை பொதுமக்கள் வாங்கி வந்தனர். இதனால் ஜவுளிக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் நேற்றும் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆடைகளை வாங்கி சென்றனர். மேலும், பலகாரங்கள் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக புதுமார்க்கெட் வீதி உள்ளிட்ட கடை வீதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் திருப்பூரில் நேற்று காலையில் இருந்து தீபாவளி பண்டிகை களை கட்டியது.

திருப்பூர் மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு, மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால் திருப்பூரில் குமரன் ரோடு, அவினாசி ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனநெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தொழில்துறையினர் போனஸ் வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு மையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் பயணிகள் காத்து நின்றனர்.

மேலும், பொதுமக்கள் தங்களது பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என போலீசார் ஒலிப்பெருக்கியில் அறிவுரையும் கூறினர். திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காணிப்பு கோபுரங்கள் மேல் இருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்நாட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டையில் நேற்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆடைகள் வாங்க குவிந்த வண்ணம் இருந்தனர்.

அங்கு ஏற்கனவே உள்ள கடைகளில் மட்டுமின்றி தற்காலிக கடைகள் அமைத்தும் பலர் ஆடைகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த கடைகளிலும் பலர் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி சென்றனர். இது போல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஆடை விற்பனை செய்யப்பட்டன. பின்னலாடை தொழில் நலிவடைந்து வந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த விற்பனை சில்லரை வியாபாரிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

Next Story