மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள ஏரிகள்கோடை காலத்தை சமாளிக்குமா சென்னை நகரம்? + "||" + Chennai city cope with the summer period?

வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள ஏரிகள்கோடை காலத்தை சமாளிக்குமா சென்னை நகரம்?

வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள ஏரிகள்கோடை காலத்தை சமாளிக்குமா சென்னை நகரம்?
வரவிருக்கும் கோடையில் சென்னைக்கு குடிநீர் தேவையை சமாளிக்க வடகிழக்கு பருவமழையை நம்பி ஏரிகள் காத்திருக்கின்றன.
சென்னை,

சென்னை நகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வடகிழக்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக எந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முழு அளவு பெய்து உள்ளதோ? அந்த ஆண்டு கோடையில் குடிநீரும் போதுமான அளவு வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு சில நாட்களை கடந்தாலும், தற்போது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகளுக்கு மழை நீரின் வரத்தும் போதுமான அளவு இல்லை. இந்தநிலை தொடர்ந்தால் ஏரிகளுக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. கோடையில் குடிநீர் நிலைமையை சமாளிப்பது என்பதும் கேள்விகுறியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

போதிய மழை

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தற்போது தான் தொடங்கி உள்ளது. தொடங்கிய உடனேயே நல்ல மழையை எதிர்பார்க்க முடியாது. 3 மாத காலம் அவகாசம் இருப்பதால் சற்று பொறுத்து இருக்க வேண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 4 ஏரிகளிலும் சேர்த்து 1.7 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இதன் மூலம் ஓரளவு வினியோகம் செய்ய முடியும். இருந்தாலும் வரவிருக்கும் கோடையில் முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்ய வடகிழக்கு பருவமழை மூலமும் தண்ணீர் பெற வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. ஏரிகளும் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மழையை பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் 5 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 4, செம்பரம்பாக்கத்தில் 3 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்தது. புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் மழை அளவு பதிவாகவில்லை. இதுதவிர தாமரைப்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 2 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

தண்ணீர் திறப்பு

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.8 டி.எம்.சி. தண்ணீர் 4 ஏரிகளிலும் இருந்தது. ஆனால் தற்போது 1.7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டிய தண்ணீரில் தற்போது கண்டலேறு அணை திறக்கப்பட்டதில் சராசரியாக 116 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதன் மூலம் பூண்டி ஏரியில் 643 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் இருந்து 428 கன அடி வீதம் தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் புழல் ஏரியில் இருந்து 90 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 45 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர வீராணம் ஏரி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சேகரிப்பு வசதி

வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீரை ஆழ்குழாய்கள் மூலம் எடுப்பதையும் குறைத்து கொள்ள வேண்டும். விதிகளுக்கு புறம்பாக ஆழ்குழாய்களை அமைக்க கூடாது. தவறும் பட்சத்தில் நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் பழுதுநீக்கப்பட்டு அவற்றை முறையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.