‘எச்சரித்து விட்டு இருக்கலாம்‘ பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடுவதா? ஈரோட்டில் வைகோ கேள்வி


‘எச்சரித்து விட்டு இருக்கலாம்‘ பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடுவதா? ஈரோட்டில் வைகோ கேள்வி
x
தினத்தந்தி 7 Nov 2018 11:15 PM GMT (Updated: 7 Nov 2018 8:21 PM GMT)

எச்சரித்து விடாமல் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடுவதா? என்று ஈரோட்டில் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

ஈரோடு,

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை அன்று நாம் காலை முதல் மாலை வரை காலம் காலமாக பட்டாசு வெடித்து வருகிறோம். ஆனால் தற்போது பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் என்று நேரம் ஒதுக்கியுள்ளனர். சில இடங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்திருக்கலாம்.

அவர்களை இதுபோல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா?.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுனர் விருப்பம் இல்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே கோர்ட்டு விடுதலை செய்யலாம் என்று பச்சைக்கொடி காட்டி விட்டது. மேலும் தமிழக அமைச்சரவையும் தீர்மானம் போட்டு அனுப்பி உள்ளது. அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுனரின் மனிதாபிமான கடமையாகும்.

அவர்கள் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர். அதனால் ஆளுனர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால் கோர்ட்டில் மற்றொரு தரப்பினர் வழக்கு போட்டு உள்ளனர் என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு அணையை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகிறது. 2 கமிட்டிகள் ஆய்வு செய்து அணை மிக வலுவாக இருக்கிறது என்று சொல்லி விட்டது. 1,000 ஆண்டுகளானாலும் பாதிப்பு இல்லை என்றும் கூறி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டி குழுவில், கேரளா சார்பில் நீதிபதி தாமஸ், தமிழ்நாடு சார்பில் நீதிபதி லட்சுமணன் ஆகியோர் மிகத்தெளிவான அறிக்கை கொடுத்து உள்ளனர். இன்னொரு அணை கட்டுவதற்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் கேரள அரசு வழக்கு போட்டு உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழக பிரச்சினையில் தலையிட்டு வருகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா பிரச்சினைகளிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.

சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு தற்போது உள்ள சட்டங்களை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். சிறுமிகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதுபற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story