பயிற்சி டாக்டர்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம் நர்சுகள் அவமரியாதையாக பேசுவதாக குற்றச்சாட்டு


பயிற்சி டாக்டர்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம் நர்சுகள் அவமரியாதையாக பேசுவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

நர்சுகள் அவமரியாதையாக பேசுவதாக கூறி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி மருத்துவ மாணவர்களாக சுமார் 150 பேர் இருக்கிறார்கள். ஓராண்டு காலம் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தங்கி, அவர்கள் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதுடன் தாங்களாகவே நோயாளிக்கு ஊசியும் போட்டு வருகிறார்கள். இவர்களை பயிற்சி டாக்டர்கள் என்றே அழைப்பதுண்டு. பயிற்சி டாக்டர்களுக்கு உதவியாக அங்கு பணியாற்றும் அனுபவம் வாய்ந்த நர்சுகள் மாத்திரை, மருந்து மற்றும் ஊசிகள் எடுத்து கொடுத்து உதவிகள் செய்து வருவது வழக்கம்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அங்கு பணியில் உள்ள பயிற்சி டாக்டர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதை அவர்கள் பெரிய அளவில் புகாராக இதுவரை சொன்னதில்லையாம். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் சிலரை சாதாரண வார்டுக்கு மாற்றுமாறு அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவரை, பயிற்சி டாக்டர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த நர்சு, பயிற்சி டாக்டரை வாடா...போடா என ஒருமையில் பேசியதுடன் மிகவும் அவமரியாதையுடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், “உன் வயதுதான் என் பணிஅனுபவம். என்னையே வேலை செய்ய பணிக்கிறாயா?” என மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார் அந்த நர்சு. இது இரவு பணியில் இருந்து பயிற்சி டாக்டர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நர்சு மன்னிப்பு கேட்கும்வரை பணி செய்வதில்லை என அரசு பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் திரண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பயிற்சி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் செவிலியர்கள்(நர்சு), பயிற்சி மருத்துவ மாணவர்களாகிய எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி வருகிறார்கள். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறபோதுகூட கிளவுஸ், ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகளை எடுத்து தந்து உதவியாக இருக்கவேண்டியவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள். நீயே எடுத்து கொள். நீ சொல்வதை கேட்க வேண்டுமா? என ஒருமையில் பேசுகிறார்கள். இரவு பணியின்போது ஸ்டாப் நர்சு ஒருவர் மிகவும் வாடா..போடா.. என மிகவும் அவமரியாதையாக பேசிவிட்டார். எனவே, அவர் மன்னிப்பு கேட்கும்வரை தர்ணா போராட்டத்தை கைவிட போவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை அறிந்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வரும் ஆஸ்பத்திரி டீனுமான டாக்டர் அனிதா, இரவு 11 மணியளவில் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பயிற்சி டாக்டர்களிடம், ‘எதுவாக இருந்தாலும் பேசிதீர்த்து கொள்ளலாம்’ எனக்கூறி தனது அலுவலகத்திற்கு அவர்களை அழைத்தார். அதைத்தொடர்ந்து பயிற்சி டாக்டர்களும் அவருடன் சென்றனர்.

அங்கு நர்சுகள் மற்றும் பயிற்சி டாக்டர்களிடம் நடந்த விஷயங்களை டீன் டாக்டர் அனிதா கேட்டறிந்தார். பின்னர், இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து போராட்டமும் கைவிடப்பட்டது.

Next Story