ஆள்கடத்தல் வழக்கில் கேரள தொழில் அதிபர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


ஆள்கடத்தல் வழக்கில் கேரள தொழில் அதிபர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 5:00 AM IST (Updated: 8 Nov 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

ஆள்கடத்தல் வழக்கில் கேரள தொழில் அதிபர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

ஆள்கடத்தல் வழக்கில் கேரள தொழில் அதிபர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தொழில் அதிபர்

கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ரமேஷ்குமார் (வயது38). இவர் மும்பையை சேர்ந்த அர்ச்சனா மற்றும் யஸ்வந்த் பாட்டீல் ஆகியோருடன் இணைந்து தொழில் செய்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு ரமேஷ்குமார் ரூ.5 லட்சத்தை தனது சொந்த தேவைக்காக எடுத்து கையாடல் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அர்ச்சனாவும், யஸ்வந்த் பாட்டீலும் அவருடன் செய்து வந்த தொழிலை கைவிட முடிவு செய்தனர். இந்த நிலையில், அர்ச்சனாவுக்கு ரமேஷ்குமார் ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

கடத்தல்

அந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்பாதேவியில் உள்ள அர்ச்சனாவின் அலுவலகம் அருகே வந்த ரமேஷ்குமார் பணம் கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்தார். பணத்தை வாங்குவதற்காக அர்ச்சனாவின் கணவர் அரவிந்த் சங்வே வந்தார். அப்போது, திடீரென ரமேஷ் குமார் உள்பட 3 பேர் சேர்ந்து அரவிந்த் சங்வேயை காரில் தமிழ்நாட்டுக்கு கடத்தி சென்றனர்.

மேலும் அர்ச்சனாவுக்கு போன் செய்து ரூ.1 கோடி தர வேண்டும் என மிரட்டினர். இதற்கு அவர் ரூ.25 லட்சம் தருவதாக தெரிவித்தார்.

ஆயுள் தண்டனை

இதற்கு சம்மதித்த ரமேஷ் குமார் பணத்தை கொச்சி விமான நிலையம் அருகே கொண்டு வரும்படி தெரிவித்தார். அந்த பணத்தை எடுத்து கொண்டு யஸ்வந்த் பாட்டீல் அங்கு சென்றார். அவருடன் போலீசாரும் சென்றனர். யஸ்வந்த் பாட்டீலிடம் இருந்து பணத்தை வாங்கிய போது ரமேஷ்குமார் மற்றும் கூட்டாளிகளான அவரது கார் டிரைவர்கள் கோபேஷ் (31), காதர் சேக் (40) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அரவிந்த் சங்வேயையும் மீட்டனர்.

இதையடுத்து கைதான 3 பேர் மீதும் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து செசன்ஸ் கோர்ட்டு, ரமேஷ்குமார் உள்பட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story