மதவாதத்தை முறியடிக்க மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் திருப்பூரில் தொல்.திருமாவளவன் பேட்டி


மதவாதத்தை முறியடிக்க மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் திருப்பூரில் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 5:00 PM GMT)

மதவாதத்தை முறியடிக்க மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று திருப்பூரில் தொல்.திருமாவளவன் கூறினார்.

திருப்பூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி திருச்சியில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவினாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், மாவட்ட செயலாளர்கள் தமிழ்வேந்தன், தமிழ் முத்து, ஜல்லிப்பட்டி முருகன், இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். முதன்மை செயலாளர் தாரவரசு, துணை பொதுச்செயலாளர்கள் கனியமுதன், உஞ்சை அரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் நடைபெற உள்ள ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, இடதுசாரி கட்சி தலைவர்கள், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீண்டும் பயங்கரவாத சக்திகளின் கைகளில் ஆட்சி சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும், மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பங்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு முக்கியமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு தப்பிப்பதா? அல்லது கலைக்கப்படுவதா? என்ற நெருக்கடியில் உள்ள சூழலில் முடிவை தமிழ்தேசிய கட்சி தீர்மானிப்பதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்தித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும். ராஜபக்சே சர்வதேச இனப்படுகொலையாளி.

இவர் மீண்டும் பிரதமர் ஆவது தமிழர்களுக்கும், இந்திய அரசுக்கும் பாதுகாப்பானதாக அமையாது. தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டிற்கு செல்ல வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளதால் அந்த தொகுதிகளில் விரைந்து தேர்தல் நடத்த வேண்டும். இந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழமை கட்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். சேலம் மாவட்டம் ஆத்தூரில் 13 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டமாக இருப்பதால் அந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். வழக்கில் தொடர்புடைய அந்த வாலிபரின் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கை நல்ல அறிகுறி. அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்டதால், கிட்டத்தட்ட 15 வருடம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெல்லாரி தொகுதி மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது நல்ல அறிகுறி. மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதை விட, மோடி பிரதமர் ஆவது மதவாத சக்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்து விடும். அது இந்தியாவின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு பேராபத்தாக முடியும். மதவாத சக்திகளை முறியடிக்க மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சர்கார் திரைப்படத்தை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது வரவேற்கத்தக்கது. கருத்து சுதந்திரம் என்ற பெயரால் குறிப்பிட்ட ஒரு கட்சியை மையப்படுத்தியோ அல்லது அவர்களின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, தனிநபரை மையப்படுத்தியோ காட்சிகள் அமைப்பது, வசனங்கள் எழுதுவது ஏற்புடையது அல்லது. பொதுவான விமர்சனங்கள் இருக்கலாம். அப்படிபட்ட அணுகு முறையை எங்கள் கட்சி ஏற்காது. சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் அதை சென்சார் போர்டு தான் தீர்மானிக்க வேண்டும். சென்சார் போர்டு உரிய அனுமதியை வழங்கிய பின்னர் அதிகாரத்தை பயன்படுத்தி காட்சிகளை நீக்க சொல்வதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story