போடியில்: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி- வாலிபர் கைது


போடியில்: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி- வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 2018-11-08T23:15:53+05:30)

போடியில் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போடி, 

தேனி மாவட்டம் போடியில் காமராஜர் சாலை சுப்பன் பஜாரில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து பணம் வைக்கப்பட்டு இருக்கும் பகுதியை உடைக்க முயன்றார். அப்போது அதிலிருந்து அலாரம் ஒலித்தது. இதை கேட்டவுடன் யாரும் வந்து விடுவார்கள் என பயந்து அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து அக்கம்பக்கத்தினர் அறிந்து போடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கார்த்திகேயன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

தேனியிலிருந்து லக்கி என்ற மோப்ப நாய் வரவழைத்து மோப்பமிட வைத்தனர். சிறிது நேரம் மோப்பமிட்ட அந்த நாய் அங்கிருந்து வெளியேறி மேற்கு நோக்கி ஓடி நின்று விட்டது. மேலும் தேனியிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மகேஸ்கண்ணன் (வயது 32) என்பது தெரியவந்தது. அதையொட்டி மகேஸ்கண்ணனை போலீசார் நேற்று காலை 9 மணியளவில் கைது செய்தனர். கொள்ளை முயற்சி நடந்த 6 மணி நேரத்தில் திருடன் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்பன் பஜாரில் 3 செல்போன் கடைகளில் திருட்டு போனது. இந்தநிலையில் தற்போது கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. எனவே சுப்பன் பஜாரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. 

Next Story