மலேசியாவில் சிக்கி தவித்த சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு


மலேசியாவில் சிக்கி தவித்த சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 8 Nov 2018 6:54 PM GMT)

உயர்மின்கோபுரம் அமைக்கும் வேலைக்கு சென்று மலேசியாவில் சிக்கி தவித்த சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மீட்கப்பட்டனர்.

சங்கரன்கோவில், 

உயர்மின்கோபுரம் அமைக்கும் வேலைக்கு சென்று மலேசியாவில் சிக்கி தவித்த சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மீட்கப்பட்டனர்.

மலேசியாவுக்கு சென்றனர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் தாருகாபுரம், தலைவன்கோட்டை, ராமசாமியாபுரம், மலையடிக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 48 பேர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவுக்கு உயர்மின் கோபுரம் அமைக்கும் வேலைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, ஒரு மாதம் நல்லபடியாக சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக சாப்பாடு, ஊதியம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடி வந்தனர். மேலும் இதுபற்றி வெளியே தெரியாமல் இருப்பதற்காக அங்கு 6 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

சிக்கி தவிப்பு

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் மட்டும் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப் மூலம் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோ காட்சியில், தாங்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக சரிவர சாப்பாடு இல்லாமல் சிக்கி தவித்து வருவதாக கண்ணீர் விட்டு கதறி அழுவது பதிவாகி உள்ளது. இதனை பார்த்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மலேசியாவில் சிக்கி தவிக்கும் 48 பேரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

மீட்பு

இந்த நிலையில் இதுகுறித்து மலேசியாவில் உள்ள தமிழ் வம்சாவளி பெண் எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜிக்கு தெரியவந்தது. உடனே அவர் தமிழக தொழிலாளர்கள் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களை மீட்டார். தொடர்ந்து அவர் வீடியோ மூலம் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் அனைவரும் பயப்பட வேண்டாம். சம்பவத்தப்பட்ட நிறுவனத்துடன் பேசி அவர்களின் ஊதியத்தை பெற்று தந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த வீடியோவில் கூறியிருந்தார். இதனால் அந்த தொழிலாளர்களின் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு உள்ளனர்.

Next Story