தூத்துக்குடியில் பயங்கரம்: தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்
தூத்துக்குடியில் தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடியில் தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-
கொத்தனார்
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45) கொத்தனார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து 2-வதாக சாந்தி (40) என்பவரை திருமணம் செய்தார்.
பாலமுருகனின் முதல் மனைவிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாலமுருகன், சாந்தி மற்றும் குழந்தைகள் அனைவரும் பொன்னாண்டி நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பாலமுருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அடித்துக் கொலை
இந்த நிலையில் நேற்று மாலையில் பாலமுருகனின் வங்கி கணக்கில் இருந்து சாந்தி ரூ.11 ஆயிரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் சாந்தியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் வீட்டில் இருந்த தோசை கரண்டியால் சாந்தியில் தலை பகுதியில் சரமாரியாக அடித்தார். இதில் ரத்தவெள்ளத்தில் சாந்தி கீழே சரிந்து விழுந்தார். பின்னர் பாலமுருகன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சாந்தியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இரவில் சாந்தி பரிதாபமாக உயிர் இழந்தார்.
பரபரப்பு
இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெறிச்செயலில் ஈடுபட்ட பாலமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story