நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கோவில் பிரச்சினைக்கு மனு கொடுக்க வந்த இருதரப்பினர் திடீர் மோதல்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கோவில் பிரச்சினைக்கு மனு கொடுக்க வந்த இருதரப்பினர் திடீர் மோதல்
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:36 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், கோவில் பிரச்சினைக்கு மனு கொடுக்க வந்திருந்த இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், கோவில் பிரச்சினைக்கு மனு கொடுக்க வந்திருந்த இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

கோவில் இடிப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்கடேசுவரபுரத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் பஞ்சாயத்து நிலத்தில் இருப்பதாக கூறி கடங்கநேரி பஞ்சாயத்து மற்றும் யூனியன் அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலின் மேற்கூரையும் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த கோவிலை நிறுவி வழிபாடு நடத்தி வரும் ஒரு சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசார் கிராம மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இருதரப்பினர் புகார் அளிக்க வந்தனர். முதலில் ஊர் நாட்டாமை கருப்பசாமி தலைமையில் சிலர் மனு கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினரும் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்களில் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர்.

இந்த நிலையில் இதே பிரச்சினைக்காக மனித உரிமை களம் பரதன், அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்க கிளை தலைவி மஞ்சுளா மற்றும் தமிழ்புலிகள் உள்ளிட்ட அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது இவர்கள் அழைத்து வந்த ஊர் மக்களை மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டதாகவும், தங்கள் ஊர் மக்களை கொடி பிடிக்க வைத்து ஆதாயம் அடைவதாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திடீர் மோதல்

இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திடீரென்று வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒருவரையொருவர் ஆவேசமாக பேசிக்கொண்டு அடிக்க பாய்ந்தனர். இதைக்கண்ட போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஊர் மக்கள் சார்பிலும் அங்கு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இருதரப்பினரும் கொடுத்த மனுக்களில், “கோவிலை இடித்த யூனியன் அதிகாரிகள், பஞ்சாயத்து செயலர் மற்றும் போலீசார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Next Story