சர்கார் திரைப்படத்தை கேலி செய்ததால் மோதல்: விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது


சர்கார் திரைப்படத்தை கேலி செய்ததால் மோதல்: விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 8:07 PM GMT)

சர்கார் திரைப்படம் குறித்து கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம், 

தீபாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மேதரமா தேவி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 29), பிரசாத் (27), விக்னேஷ் (22), குணசேகரன் (27) ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் அங்குள்ள மாரியம்மன் கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது சர்கார் திரைப்படம் குறித்து அவர்கள் கேலியாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த வழியாக சென்ற அதே கிராமத்தை சேர்ந்த விஜய் ரசிகர்களான தினேஷ்குமார் (25), அலெக்சாண்டர் (25) ஆகிய இருவரும் எப்படி நீங்கள் விஜய் படத்தை கேலியாக பேசலாம்? என தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று ரமேஷ், பிரசாத், விக்னேஷ், குணசேகரன் ஆகிய 4 பேரும், அந்த வழியாக வந்்த விஜய் ரசிகர்கள் தினேஷ்குமார், அலெக்சாண்டர் ஆகிய இருவரையும் திடீரென்று வழி மறித்து சரமாரியாக அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி காயப்படுத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார், அலெக்சாண்டர் ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் கொடுத்து விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், பிரசாத், விக்னேஷ், குணசேகரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

சர்கார் திரைப்படம் குறித்து கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story