ஈரோடு மாவட்டத்தில்: ‘சர்கார்’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


ஈரோடு மாவட்டத்தில்: ‘சர்கார்’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 8:22 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ‘சர்கார்’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகி உள்ள ‘சர்கார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள் ஆர்வமாக சென்று படத்தை பார்த்து வருவதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்தநிலையில் ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று அ.திமு.க.வினர் போர்க்கொடி எழுப்பி உள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் பலர் ‘சர்கார்’ படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்து உள்ளனர். மேலும், சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ‘சர்கார்’ படம் திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளில் நேற்று அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நடிகர் விஜய் பேனர்களையும் அவர்கள் கிழித்தனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ பட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 24 திரையரங்குகளில் ‘சர்கார்’ படம் திரையிடப்பட்டு உள்ளது. அந்த திரையரங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரோடு மேட்டூர்ரோடு, பெரியவலசு, காசிபாளையம், காளைமாட்டு சிலை உள்ளிட்ட இடங்களிலும், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள 2 திரையரங்குகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் ‘சர்கார்’ பட திரையரங்குகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story