டெங்கு காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


டெங்கு காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 9 Nov 2018 4:15 AM IST (Updated: 9 Nov 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் அருகே உள்ள தீயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோசுக்கு(வயது 3) கடந்த 3-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சந்தோசை, உறவினர்கள் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், காய்ச்சல் குணமடையாததால், சந்தோஷ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் கள், சந்தோசுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சந்தோசுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து தீயத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அந்த கிராமத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பெரியசாமி, தமிழ்ச்செல்வன், கரூர் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கணேசன், ஊராட்சி செயலாளர் சாமிக்கண்ணு மற்றும் மருத்துவக்குழுவினர் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் டெங்கு கொசுவை ஒழிக்க கொசு மருந்துகள் அடிப்பது, பிளச்சிங் பவுடர் தூவுவது, குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

Next Story