கரும்பச்சை நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் குளிக்க தயக்கம் எதிரொலி காவிரி ஆற்றில் 6 இடங்களில் தண்ணீர் பரிசோதனை


கரும்பச்சை நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் குளிக்க தயக்கம் எதிரொலி காவிரி ஆற்றில் 6 இடங்களில் தண்ணீர் பரிசோதனை
x
தினத்தந்தி 9 Nov 2018 3:45 AM IST (Updated: 9 Nov 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கரும்பச்சை நிறத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால் பொது மக்கள் குளிக்க தயக்கம் காட்டினர். இதை தொடர்ந்து திருச்சி காவிரி ஆற்றில் 6 இடங்களில் தண்ணீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாகவும், மாவட்ட மக்களின் புண்ணிய நதியாகவும் விளங்குவது காவிரி ஆறு. இந்த காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி சேலம், ஈரோடு,நாமக்கல், கரூர் , திருச்சி மாவட்டத்தின் வழியாக தஞ்சை மாவட்டம் கல்லணை வழியாக சென்று இறுதியில் பூம்புகார் கடலில் கலக்கிறது.மேற்கண்ட மாவட்டங்களில் விவசாயத்துக்கும் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு விளங்குகிறது. அது மட்டுமல்ல காவிரி ஆற்றில் பல இடங்களில் ஆழ்குழாய் அமைத்து உள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலம் காவிரி குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இப்படி பெருமை வாய்ந்த காவிரியில் ஏராளமானவர்கள் தினமும் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் கரும்பச்சை நிறத்தில் வருகிறது. சாயக்கழிவு போன்று கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தால் உடலில் பாதிப்புகள் ஏற்படுமோ என்று பொது மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக கடந்த மாதம் 27-ந் தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் காவிரி ஆற்று தண்ணீரை பற்றி பரபரப்பு தகவல் வெளியானது.

தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை பெட்டவாய்த்தலை, முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம்,கம்பரசம்பேட்டை,திருமஞ்சனக் கரை,மஞ்சக்கரை, மேலூர் காவிரி ஆறு ஆகிய 6 இடங்களில் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கேன்களில் பிடித்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பரிசோதனைக் காக எடுக்கப்பட்ட தண்ணீர் மண்டல நீர் பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வு முடிவுகள் 10 நாட்களில் கிடைக்கும் என்று ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் தெரிவித்தார்.

Next Story