‘நாட்டு நடப்புகளை சினிமாவில் சொல்வது தவறல்ல’ - கவுந்தப்பாடியில் வைகோ பேட்டி
நாட்டு நடப்புகளை சினிமாவில் சொல்வது தவறல்ல என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கவுந்தப்பாடியில் அளித்த பேட்டியின்போது கூறினார்.
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, அண்ணா எழுதிய ஓர் இரவு ஆகிய படங்களில் இருந்தே சமூக சீர்திருத்த கருத்துகள் சினிமாவில் சொல்லப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. தனிப்பட்ட முறையில்தான் யாரையும் விமர்சிக்க கூடாது.
விஜய் நடித்த சர்கார் படத்தில் அரசுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த படத்துக்கு எதிராக ஆளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை சினிமாவில் சொல்வது தவறல்ல. இதற்காக அந்த படத்துக்கு நெருக்கடி கொடுப்பது என்னை பொறுத்தவரை தவறு. விஜய் பண்பானவர். அனைவரையும் மதிப்பவர். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்க மாட்டார். தி.மு.க.வுடன் எங்களுக்கு எப்போதும் கொள்கை ரீதியில் கூட்டணி உண்டு. இதை ஈரோட்டில் நடந்த மாநாட்டிலேயே அறிவித்தோம். வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்துதான் போட்டியிடுவோம். தீபாவளி அன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்களை எச்சரித்து விட்டிருக்கலாம். அதற்காக அவர்கள் மீது வழக்குப்போடுவது நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story