ஆனைகட்டி பகுதியில்: அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வருகை


ஆனைகட்டி பகுதியில்: அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வருகை
x
தினத்தந்தி 9 Nov 2018 3:30 AM IST (Updated: 9 Nov 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஆனைகட்டி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

துடியலூர்,

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ஆனைகட்டி மலைப்பகுதி, அனுவாவி சுப்பிர மணியசாமி கோவில் பகுதி, பொன்னூத்து மலை ஆகிய பகுதிகளில் காட்டுயானை, காட்டுப்பன்றி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் யானைகளின் அட்டகாசம் குறைய வில்லை. இந்த நிலையில், ஆனைகட்டி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வளர்ப்பு யானைகளான (கும்கிகள்) விஜய் (வயது 47), பொம்மன் (17) ஆகிய 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

இந்த கும்கி யானைகள் நேற்று காலையில் தெப்பகாடு பகுதியில் இருந்து லாரிகளில் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

தற்போது 2 யானைகளும் சிறுவாணி அருகில் உள்ள சாடிவயல் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளது. நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 2 கும்கி யானைகளும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story