சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி 2 பேர் காயம்


சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 9:44 PM GMT)

குருபரப்பள்ளி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் வி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் ஆசிப் (வயது 25). ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (25). பொக்லைன் ஆபரேட்டர்கள். சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பாஸ்கர்(48). டிப்பர் லாரி டிரைவர். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது குருபரப்பள்ளி அருகே புளியரசிமேடு என்ற இடத்தில் வரும் போது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சாலையில் விழுந்து காயம் அடைந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆசிப், முனியப்பன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story