சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு - ரூ.2 லட்சம் அபராதம் வசூல்


சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு - ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 9:50 PM GMT)

போளூர் உட்கோட்டத்தில் சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.2 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

போளூர்,

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி உத்தரவின்பேரில் போளூர் போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போளூர், கலசபாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதியில் போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 482 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 274 பேர் மீதும், அதில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் 239 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 69 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கார் ஓட்டும்போது ‘சீட்’ பெல்ட் அணியாமல் இருந்த 81 பேர் மீதும், இருசக்கர வாகனங்களில் 3 பேர் அமர்ந்து சென்ற 112 பேர் மீதும் என சாலை விதிகளை மீறிய பல்வேறு குற்றத்திற்காக 1,647 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களில் 20 ஆயிரத்து 173 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சத்து 92 ஆயிரத்து 550 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் கூறினார். அப்போது இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story