மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: உண்மை நிலவரத்தை பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் வானதி சீனிவாசன் பேட்டி + "||" + Dengue Fever Damage: The Government should inform the public about the real situation

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: உண்மை நிலவரத்தை பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் வானதி சீனிவாசன் பேட்டி

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: உண்மை நிலவரத்தை பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் வானதி சீனிவாசன் பேட்டி
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து உண்மையான நிலவரத்தை அரசு, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
நாமக்கல்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு, நோயை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்காமல், அதிகாரிகளால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து உண்மையான நிலவரத்தை அரசு, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க முடியும். அரசு சுகாதாரம், விழிப்புணர்வு, மருத்துவ சேவைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.


பரமத்திவேலூர் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன்குளம் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. சிலர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளதாக அறிகிறோம். அந்த தடை உத்தரவை அரசு நீக்கி, விவசாயிகள் அங்கு மண் எடுப்பதற்கும், குளத்தை தூர்வாருவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சர்கார் திரைப்படத்தை பொறுத்தவரை, தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு திரைப்படத்தை அல்லது காட்சிகளை திரும்ப பெற தணிக்கை குழுவிற்கோ அல்லது அமைச்சகத்துக்கோ அதிகாரம் கிடையாது. இதை நீதிமன்றம் மூலமே செய்ய முடியும். அரசாங்கத்தை இந்த திரைப்படம் விமர்சிப்பதாக இருந்தால், திரைப்படத்தை இயக்கியவர்களையோ அல்லது நடித்தவர்களையோ எதிர்த்து வழக்கு தொடரலாம்.

காங்கிரஸ் கட்சி பெயரளவில் மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி என்ற முகமூடிக்குள் நுழைந்து, ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றன. அதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணம் ஒழிப்பின் ஒரு அங்கம். இதனால் அரசுக்கு வரி செலுத்தாமல் இருந்தவர்கள் இப்போது வரி செலுத்தி வருகின்றனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வலுவான கூட்டணி அமையும். இருப்பினும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு தெரியும். தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது குறித்து, கட்சியின் உயர்மட்டக்குழு அடுத்த வாரம் கூடி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் சேலம், நாமக்கல் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்ட நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். இதில் மாநில துணை தலைவர் சிவகாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பட்ஜெட்டை பார்த்து காங்கிரசாருக்கு காய்ச்சல் வந்துவிட்டது’ - பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்
பட்ஜெட்டை பார்த்து காங்கிரசாருக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.