ஜனார்த்தனரெட்டி விரைவில் கைது செய்யப்படுவார் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் பேட்டி


ஜனார்த்தனரெட்டி விரைவில் கைது செய்யப்படுவார் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 10:08 PM GMT)

முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதால் ஜனார்த்தனரெட்டி கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதால் ஜனார்த்தனரெட்டி கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

அலோக்குமார் ஆலோசனை

பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, பெங்களூருவில் நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவாகி உள்ள வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், 57 கிலோ தங்க கட்டிகளை பெற்றிருந்தார். இதுெதாடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாகி விட்ட ஜனார்த்தனரெட்டியை தேடிவருகிறார்கள். இந்த நிலையில், குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் நேற்று சிட்டி மார்க்கெட்டில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர், இந்த வழக்கு விசாரணை குறித்து குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் கிரீஸ் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, நிதி நிறுவன அதிபர் பரீத்துடன், ஜனார்த்தனரெட்டி நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேரம் பேசிய புகைப்படங்கள் வெளியானதற்காக குற்றப்பிரிவு போலீசாரை, அலோக்குமார் கடிந்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

விரைவில் கைது

பரீத் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசிய ஜனார்த்தனரெட்டியை கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய பெங்களூரு, பல்லாரி, ஐதராபாத், ஆந்திராவில் குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தேடிவருகிறார்கள். ஜனார்த்தனரெட்டிக்கு சொந்தமான வீடுகளில் நடத்திய சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர் எங்கு உள்ளார் என்பது பற்றி முக்கிய தகவல்களும் கிடைத்திருக்கிறது. அதனால் கூடிய விரைவில் ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்படுவார்.

இந்த வழக்கில் பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் ரமேசை கைது செய்தபோதே, ஜனார்த்தனரெட்டிக்கு தன்னை போலீசார் நெருங்குவது தெரியவந்தது. அதனால் அவர் தலைமறைவாகி உள்ளார். அதே நேரத்தில் இடைத்தேர்தல் கடந்த 3-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை 6-ந் தேதியும் நடந்ததால் ஜனார்த்தனரெட்டி விவகாரத்தை வெளியே கொண்டு வரவில்லை. இடைத்தேர்தலில் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தால் அரசியல் சாயம் பூச வாய்ப்புள்ளது. ஆனாலும் ஜனார்த்தனரெட்டி மீதான விசாரணை சரியான பாதையில் செல்கிறது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அலோக்குமார் கூறினார்.

Next Story