வேடசந்தூர் அருகே: குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் - பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு தொட்டிக்கு மாலை அணிவித்து, பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தையூர் கிராமத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடந்த ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அந்த குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.
மேலும் கிராமத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் பெண்கள் நடந்து சென்று தனியார் தோட்டங் களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்தனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றை சீரமைத்து குடிநீர் தொட்டியின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று ஒத்தையூரில் போராட்டம் நடந்தது. இதற்கு வேடசந்தூர் ஒன்றிய பா.ம.க. செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் நகர செயலாளர் கவுதமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து, அதன் முன்பு பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story