அவினாசியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது


அவினாசியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:41 PM GMT (Updated: 8 Nov 2018 10:41 PM GMT)

அவினாசியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவினாசி,

அவினாசியை அடுத்த தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 60). இவர் கடந்த 5-ந்தேதி மொபட்டில் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் வழிமறித்து மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் அருகே அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன் மற்றும் கணேசன் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கோவை கணபதியை சேர்ந்த நட்டு என்ற நடராஜ் (வயது 37)மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார்(27) என்பது தெரிய வந்தது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நடராஜ் மீது சென்னை, திருப்பூர் திருச்சி, தஞ்சை, விழுப்புரம், நெல்லை, கோவை, அவினாசி, சேவூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, வீடுபுகுந்து திருடுவது, பூட்டை உடைத்து திருடுவது என்பது உள்பட 100 குற்ற வழக்குகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

அவர்களிடம் இருந்து 44 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story