காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால்  பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Nov 2018 11:35 PM GMT (Updated: 8 Nov 2018 11:35 PM GMT)

மூடிகெரேவில், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு, 

மூடிகெரேவில், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் அரசு ஊழியர்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் கணினி அலுவலராக வேலை பார்த்து வந்தவர் காவ்யா(வயது 24). அரசு ஊழியரான இவருடைய சொந்த ஊர் சிவமொக்கா மாவட்டம் ஆகும். வேலை காரணமாக இவர் மூடிகெரே பகுதியிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கும், இவருடன் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அதற்காக இருவரும் தங்களுடைய பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளியை காவ்யா வெகு சிறப்பாக கொண்டாடினார். புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தார். மேலும் தீபாவளி அன்று தான் எடுத்த புகைப்படங்களையும் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன்பிறகு 2 நாட்களாக அவர் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு காவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அதைப்பார்த்து பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இதுபற்றி மூடிகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காதலனிடம் போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காவ்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காவ்யா தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை யாரோ மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருப்பதும், அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் காவ்யாவின் காதலனை பிடித்து, புகைப்படங்கள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story