அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக விவசாய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு- போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக அப்பாவி விவசாய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டிடம் மற்றொரு தரப்பு மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தேனி,
தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மருகால்பட்டியில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சாதியை சொல்லி திட்டியதாகவும், சிலையை சேதப்படுத்தியதாகவும் குள்ளப்புரத்தை சேர்ந்த 12 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குள்ளப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்களுடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன், கட்சியின் மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர்.சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகளும் வந்தனர்.
பின்னர், குள்ளப்புரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சார்பில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ‘தீபாவளி பண்டிகையன்று எங்கள் ஊரில் சமுதாய பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியதோடு, கொடி கம்பங்களை சேதப்படுத்தி, பெண்களை விரட்டிய மருகால்பட்டியை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஊரில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக எங்கள் ஊரை சேர்ந்த அப்பாவி விவசாய தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் ஊர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story