மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 4:15 AM IST (Updated: 10 Nov 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

இந்தியாவில் கள்ள நோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி உயர்மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000-ஐ செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கையின் 3-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 9-ந்தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், கரூர் மாவட்ட பார்வையாளருமான பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு, வர்த்தக அணி மாவட்ட தலைவர் லியோ சதீஷ் மற்றும் சேங்கல் மணி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது பொருளாதார சறுக்கலுக்கு தான் அச்சாரமாக மாறி இருக்கிறது. சிறு-குறு வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிறு தொழில்கள் நலிவடைந்ததால் பலர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. சில வங்கி ஏ.டி.எம்.களிலும் பணத்தட்டுப்பாடு இருப்பதால் பொதுமக்கள் அவதியுறுவதை காண முடிகிறது. எனவே இதற்கு மாற்றுமுறை தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையாண்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரசார் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், கரூர் தாந்தோன்றிமலை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஐ.என்.டி.யு.சி. மாநில பொது செயலாளர் அம்பலவாணன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பணமதிப்பிழப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் குறித்தும், அதனை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரசார் எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் சின்னையன், செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story