அனுமதியின்றி சர்கார் திரைப்படம் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சர்கார் திரைப்படம் பேனர் அனுமதியின்றி வைத்ததாக விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் தமிழக அரசையும், குறிப்பிட்ட நபர்களையும் விமர்சனம் செய்து கதை வசனம் மற்றும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வினர் தமிழகத்தில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பல்வேறு திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர்களையும் கிழித்து எறிந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திரையரங்குகள் முன்பும் சர்கார் படத்திற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சர்கார் பட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊரகம், மத்திய, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சர்கார் பட பேனர்கள் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த பேனர்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தியேட்டர்கள் முன்புறம் உள்ள பேனர்களை அகற்றவும் ரசிகர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினார்கள்.
ஆனால் மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை மட்டுமே ரசிகர்கள் சிலர் அப்புறப்படுத்தினார்கள். மற்ற பகுதிகளில் பேனர்கள் அகற்றப்படவில்லை. மேலும், அனுமதியின்றி யாரும் பேனர்களை வைக்க கூடாது என்றும் போலீசார் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். திரையரங்குகளின் நிர்வாகம் சார்பில் திரையரங்குகளின் முன்புறத்தில், சர்கார் திரைப்படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் திரையிடப்படும் என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story