வீடுதோறும் சட்டப்பணி விழிப்புணர்வு பிரசாரம்; நீதிபதி கயல்விழி தொடங்கி வைத்தார்
தேசிய சட்டப்பணிகள் தினத்தையொட்டி வீடுதோறும் சட்டப்பணிகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை ராமநாதபுரத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
நாடு முழுவதும் நேற்று தேசிய சட்டப்பணிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி வீடுதோறும் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இந்த திட்டத்தின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் மக்களை பிரசார வாகனங்கள் மூலம் சந்தித்து சட்டப்பணிகள் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்–கோர்ட்டு நீதிபதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்த பிரசார வாகனங்கள் மூலம் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் மக்களை சந்தித்து சட்ட உதவி பெறுவதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவை எந்தெந்த வழிகளில் அணுகலாம் எந்தமாதிரியான சட்ட உதவிகள், சட்ட ஆலோசனை பெறலாம் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.
வருகிற 18–ந்தேதி வரை 10 நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் சட்ட தன்னார்வலர்கள் மூலம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மாவட்ட நீதிபதி கயல்விழி தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி சிவப்பிரகாசம், சப்–கோர்ட்டு நீதிபதி பிரீத்தா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எண்–1 இசக்கியப்பன், எண்–2 ராதாகிருஷ்ணன், வக்கீல் சங்க செயலாளர் நம்புநாயகம் மற்றும் கோர்ட்டு பணியாளர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.