இளையான்குடி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - தி.மு.க. வலியுறுத்தல்
இளையான்குடி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
இளையான்குடி,
இளையான்குடி மேற்கு ஒன்றிய பேரூர் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் மூத்த முன்னோடி அய்யனார் தலைமையில் நடைபெற்றது. பேரூர் செயலர் நஜிமுதீன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தலைமை கழக பிரநிதிகள் மூலம் உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது என்றும், சென்றாண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை இளையான்குடி பகுதியில் வழங்கப்படாத நிலையில் இந்தாண்டிற்கான பயிர்க்காப்பீட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
எனவே இந்தாண்டிற்கான இந்த பணிகளை விரைந்து தொடங்குதவற்கு சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களுக்கு உரிய ஆணை வழங்க மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது என்றும், இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள தாயமங்கலம், தோக்கனேந்தல், இளமனூர், விளங்குளம் ஆகிய ஊர்களில் மோசமான நிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளையான்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி சிவமுத்துவளவன், மாவட்ட நெசவாளர் அணி முருகானந்தம், மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி, ஒன்றிய இளைஞரணி பிரபு, ஒன்றிய பொறியாளர் அணி மூக்கையா, மாணவரணி பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலர் மலைமேகு, தொழில் நுட்ப அணி கண்ணன் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.