சரக்கு ரெயிலில் பெட்டிகள் இணைக்கும் பணி: நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது - போக்குவரத்து பாதிப்பு


சரக்கு ரெயிலில் பெட்டிகள் இணைக்கும் பணி: நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:45 PM GMT (Updated: 9 Nov 2018 10:11 PM GMT)

சரக்கு ரெயிலில் பெட்டிகள் இணைக்கும் பணி நடைபெற்றதால் நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையில் இருந்து காஞ்சீபுரத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் சரக்கு ரெயிலில் பெட்டிகள் இணைப்பு பணி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இந்த பணி நடந்து கொண்டிருந்த போது மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடா மங்கலத்திற்கு வந்து நின்றது.

இதை தொடர்ந்து சரக்கு ரெயிலில் பெட்டிகள் இணைக்கும் பணி முடிவடைந்தவுடன் நீடாமங்கலத்தில் இருந்து திருவாரூர் வழித்தடத்தில் சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. பின்னர் சுமார் 20 நிமிடம் கழித்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலும் திருவாரூர் வழித்தடத்தில் புறப்பட்டு சென்றது.

சரக்கு ரெயிலில் பெட்டிகள் இணைப்பு பணிக்காக நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டது. இதனால் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நெடுஞ் சாலையில் வரிசையாக காத்திருந்தன. இதேபோல் சென்னையில் இருந்தும் காரைக்கால், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்தும் தஞ்சாவூர், திருச்சி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், வேதாரண்யம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் காத்திருந்திருந்தன.

பெட்டிகள் இணைப்பு பணிகள் முடிவடைந்து சரக்கு ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்ற பிறகு தான் 6.30 மணிக்கு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் 1 மணி நேரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதிப்பட்டனர்.



Next Story