‘சர்கார்’ பட தியேட்டரை முற்றுகையிட்டு தஞ்சையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - பகல் நேர காட்சிகள் ரத்து


‘சர்கார்’ பட தியேட்டரை முற்றுகையிட்டு தஞ்சையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - பகல் நேர காட்சிகள் ரத்து
x
தினத்தந்தி 10 Nov 2018 5:00 AM IST (Updated: 10 Nov 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

‘சர்கார்’ பட தியேட்டரை முற்றுகையிட்டு தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

‘சர்கார்’ பட தியேட்டரை முற்றுகையிட்டு நேற்று தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தியேட்டர்களில் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

நடிகர் விஜயின் சர்கார் படத்துக்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தியேட்டர்களின் முன்பு வைக்கப்பட்டு இருந்த நடிகர் விஜய் பேனர்களும் கிழிக்கப்பட்டன.

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று சர்கார் படம் ஓடிய தஞ்சை பனகல் கட்டிடம் அருகே உள்ள ஒரு தியேட்டரை முற்றுகையிடுவதற்காக அ.தி.மு.க.வினர்ர் சென்றனர். அங்கு சர்கார் பட காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆபிரகாம் பண்டிதர் சாலைக்கு வந்த அ.தி.மு.க.வினர், அங்கு சர்கார் படம் ஓடிய தியேட்டரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை நகரம், தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், தஞ்சை மொத்த நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதில் நடித்த நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.

படத்தை மீண்டும் தணிக்கை செய்து வெளியிடும் வரையில் தியேட்டரை விட்டு செல்லமாட்டோம் என கூறி தியேட்டர் முன்பு கோஷமிட்டபடியே இருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தஞ்சையில் உள்ள தியேட்டர்களில் நேற்று சர்கார் பட பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.



Next Story