அரசு ஆஸ்பத்திரியில் தனக்கு முதலில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டரை தாக்கிய வாலிபர் கைது


அரசு ஆஸ்பத்திரியில் தனக்கு முதலில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 4:00 AM IST (Updated: 10 Nov 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தனக்கு முதலில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புதுப்பட்டினம் சட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 27). நேற்று முன்தினம் மாலை தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுப்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டார்.

இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வெங்கடேஷ் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு ஒரு பெண் டாக்டரும், கார்த்திக் சந்திரன் (வயது 32) என்ற ஆண் டாக்டரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.

மது போதையில் தற் கொலைக்கு முயற்சித்து கழுத்தை அறுத்து கொண்ட வெங்கடேஷ் தனக்கு முதலில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று டாக்டர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரத்தில் டாக்டர் கார்த்திக்சந்திரனை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மற்ற டாக்டர் கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறி ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும் டாக்டரை தாக்கிய நபரை கைது செய்யக்கோரியும் கோஷமிட்டபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு போலீசார் டாக்டர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் டாக்டரை தாக்கிய வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்றும் 200-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் காலிபணியிடங்களை நிரப்பக்கோரியும் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Next Story