சர்கார் படத்துக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு; சென்னிமலை தியேட்டரில் பகல் காட்சிகள் ரத்து


சர்கார் படத்துக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு; சென்னிமலை தியேட்டரில் பகல் காட்சிகள் ரத்து
x
தினத்தந்தி 10 Nov 2018 4:59 AM IST (Updated: 10 Nov 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

சர்கார் படத்துக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னிமலையில் உள்ள திரையரங்கில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சத்தியமங்கலம், கோபியில் பேனர்கள் அகற்றப்பட்டது.

சென்னிமலை,

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகி உள்ள ‘சர்கார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ பட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட 24 திரையரங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னிமலை அறச்சலூர் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் சர்கார் படம் திரையிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படம் பார்ப்பதற்காக காலை 10.30 மணி அளவில் 50–க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டிக்கெட் பெற்றுக்கொண்டு திரையரங்கத்தின் உள்ளே அமர்ந்து இருந்தனர். அப்போது பகல் 10.45 மணி அளவில் திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் கே.வி.மணிமேகலை தலைமையில் முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் யுவராஜ், நீலாவதி, சிரகிரி டெக்ஸ் தலைவர் இளங்கோ உள்பட 15 பேர் அந்த திரையரங்கிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இங்கு திரையிடப்படும் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென அவர்கள் டிக்கெட் கவுண்டருக்குள் நுழைந்தனர்.

திரையரங்கு நிர்வாகிகளிடம் அவர்கள், ‘சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிட வேண்டும். இல்லையென்றால் திரையிடக்கூடாது’ என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பகல் காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் திரையரங்கின் உள்ளே அமர்ந்து இருந்த ரசிகர்களை வெளியேறுமாறு கூறினார்கள். ஏமாற்றத்துடன் ரசிகர்கள் வெளியே சென்றனர். அவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. ஒரு சிலர் திரையரங்கு நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மதியம் 2.30 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இந்த திரையரங்கை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கோபியில் சர்கார் படம் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது. இங்கு வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் தாமாகவே முன்வந்து 20–க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினார்கள்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் சர்கார் படம் திரையிடப்பட்டு உள்ளது. இங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் போலீசாரின் அறிவுரையை ஏற்று திரையரங்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த 10 பேனர்களை ரசிகர்கள் அகற்றினார்கள். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களும் அகற்றப்பட்டது.


Next Story