சேலம் போஸ் மைதானத்தில் முதல் முறையாக புத்தக திருவிழா கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்


சேலம் போஸ் மைதானத்தில் முதல் முறையாக புத்தக திருவிழா கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Nov 2018 4:30 AM IST (Updated: 10 Nov 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் போஸ் மைதானத்தில் முதல் முறையாக புத்தக திருவிழா தொடங்கியது. இதனை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) மற்றும் சேலம் புத்தக வாசிப்போர் இயக்கம் ஆகியவை சார்பில் சேலத்தில் முதல் முறையாக புத்தக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திருவிழா சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் 13 நாட்கள் நடத்தப்படுகிறது.

இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், செம்மலை எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் புத்தக திருவிழா-கண்காட்சியில் 112 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழாவை பொதுமக்கள் பார்வையிடலாம். கலை, அறிவியல், இலக்கியம், ஆன்மிகம், சிறுகதைகள், கட்டுரைகள், வர்த்தகம், சிறுவர் கதைகள், வரலாறு, ஓவியம், கணிதம், நடப்பு நிகழ்வுகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக சேலத்தில் முதலாவதாக மாபெரும் புத்தக திருவிழாவை நடத்துகிறோம். இந்த புத்தக திருவிழா, கண்காட்சி வருகிற 21-ந் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும். பல்வேறு தலைப்புகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிடுவதற்காக கல்வித்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்கள் வாங்கும் நபர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் இந்த புத்தக திருவிழா, கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கண்காட்சியை முன்னிட்டு தினமும் பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு தலை சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டி மன்றம், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

Next Story