சேலத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு


சேலத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 5:45 AM IST (Updated: 10 Nov 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன்பு இருந்த பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்‘ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

அதைதொடர்ந்து இந்த திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டிபிளஸ் தியேட்டரில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பலர் தியேட்டர் முன்பு திரண்டு வந்து சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தியேட்டர் முன்பு இருந்த சர்கார் பட பெரிய பேனர்களை கம்புகளை கொண்டு கிழித்தனர். மேலும் சாலையில் நடுவில் இருந்த பேனர்களையும் அவர்கள் கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டர்கள் அருகே சென்று சர்கார் படத்தின் டிக்கெட்டை வினியோகம் செய்யக்கூடாது என்றும், படக்காட்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக டிக்கெட் கவுன்ட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் போலீசார் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு தான், காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் தியேட்டர் மேலாளர் ஜாகீர், அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதாவது, சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சர்கார் படம் திரையிடப்படாது. காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் தான் சர்கார் படம் திரையிடப்படும். எனவே போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் கூறினார். இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். மேலும் சர்கார் படம் பார்க்க வந்த ரசிகர்களும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் 5 ரோடு அருகே உள்ள ஒரு தியேட்டருக்கு செல்வதற்குள், அங்கிருந்த சர்கார் பட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன. மேலும் அந்த தியேட்டரிலும் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இதுதவிர மாநகரில் சர்கார் படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Next Story