சர்கார் சினிமா பட பேனர்கள் அகற்றம்: நகராட்சி ஆணையர் அலுவலகத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகை
சர்கார் சினிமா பட பேனர்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த படம் புதுவையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. அந்த தியேட்டர்களின் முன்பு விஜய் ரசிகர்கள் பேனர்கள் கட்டி வைத்திருந்தனர்.
அதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புதுவை நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் உத்தரவின்பேரில் தியேட்டர்கள் முன்பு அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் நேற்று மதியம் புதுச்சேரி கம்பன் கலையரங்க வளாகத்தில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், விஜய் ரசிகர்களின் பேனர்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இதேபோல் அரசியல்வாதிகள் அனுமதி பெறாமல் வைத்துள்ள பேனர்களையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி ஆணையர் அவர்களிடம், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.