அனைத்து தாலுகா அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் நாளை ஆர்ப்பாட்டம் ஆரணியில் நடந்த கூட்டத்தில் முடிவு


அனைத்து தாலுகா அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் நாளை ஆர்ப்பாட்டம் ஆரணியில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 11 Nov 2018 4:15 AM IST (Updated: 10 Nov 2018 9:32 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆரணி, 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம் ஆரணியில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆரணி வட்ட தலைவர் ஆர்.கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணை தலைவர் கே.சிவகுமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 132 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே கூடுதல் பொறுப்பை கவனிக்கும் ஊர்களுக்கு புதிய கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி 132 கிராமங்களில் 8-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மேற்கண்ட 132 ஊர்களுக்கு புதிய கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தி 12-ந் தேதி (நாளை) மாலை 5 மணியளவில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதன்பின் 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது.

புதிதாக கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு கிராம நிர்வாகம் தொடர்பான பயிற்சி, நிலஅளவை பயிற்சி ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் விஜயகுமார், ஜெயசந்திரன், போராட்ட குழு தலைவர் கோகுலராமன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தண்டபாணி நன்றி கூறினார்.

Next Story