வேலைவாய்ப்பிற்காக சொந்த மக்களை வெளி மாநிலத்துக்கு அனுப்பி அரசு வேடிக்கை பார்க்கிறது கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு


வேலைவாய்ப்பிற்காக சொந்த மக்களை வெளி மாநிலத்துக்கு அனுப்பி அரசு வேடிக்கை பார்க்கிறது கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Nov 2018 5:00 AM IST (Updated: 10 Nov 2018 11:32 PM IST)
t-max-icont-min-icon

வேலை வாய்ப்பிற்காக சொந்த மக்களை வெளி மாநிலத்துக்கு அனுப்பி அரசு வேடிக்கை பார்க்கிறது என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டி பேசினார்.

கிருஷ்ணகிரி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “மக்களுடனான பயணம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று மாலை 2-வது நாளாக தர்மபுரி மாவட்டம் அரூரில் தனது சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர் ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசும் போது கூறியதாவது:-

வேலை வாய்ப்பிற்காக தனது சொந்த மக்களை அடுத்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்து இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேர்மையான முறையில் இந்த தேர்தலை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் அரூர் தொகுதி மக்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.

இங்கு கூடியுள்ள இந்த இளைஞர்கள் கூட்டம் இதுவரை நடந்த மற்றும் நடைபெறும் ஆட்சிகளின் மீது பெரும் கோபத்தையும், ஏமாற்றத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிறார்கள். அதை மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்களாகிய நீங்கள் ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு உங்களின் 5 வருட வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள்.

சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஓட்டை விற்று விடாதீர்கள். மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்க கூடிய கிராம சபை கூட்டங்களில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள். இளைஞர்கள் தைரியமாக உங்களின் எதிர்காலத்துக்கு குரல் கொடுக்க தயாராகி விட்டீர்கள் என்றால் நாளை நமதே! நிச்சயம் நமதே!.

இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதி தர நான் வரவில்லை. மாறாக மக்களுக்கு தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ள கூடிய வகையில் அரசு அமைந்திட எங்களின் கட்சி உழைத்திடும். மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து வெற்றி அடைய முடியும் என்ற நம்பிக்கை என் மீது நீங்கள் காட்டும் அன்பினால் எனக்கு அதிகரிக்கிறது.

நமக்கு தலைவர்கள் தேவை இல்லை. நிர்வாகிகள் தான் தேவை. அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. கொஞ்சம், கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை. இனி மொத்தமாக நல்லது செய்ய வேண்டியது தான். ஒரு அரசியல்வாதியாக என்னுடன் மக்கள் நடத்தும் உரையாடல் எனக்குள் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையும் அளிக்கிறது. நாம் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திட வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் அனைவருக்கும் சம வாய்ப்பில் கல்வி வழங்கும். உங்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணுபவர்களை தவறென்று உணர்த்துங்கள். இளைஞர்களே நாளைய தமிழகத்தின் சிற்பிகள். தமிழகத்தை புதிதாக செதுக்க கூடிய சிற்பிகள் நீங்கள் தான். தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு 5 ஆண்டுகள் கொடுங்கோலர்கள் கையில் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.

நீங்கள் வாங்க கூடிய பணத்தை 5 ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு பார்த்தால் தினமும் நீங்கள் குடிக்க கூடிய காபிக்கு கூட அது தகுதியில்லை என்பதை உணருங்கள். ஏழ்மையை காரணம் காட்டி உங்களின் ஓட்டுகளை சிலர் விலை பேசுவார்கள். ஜனநாயகம் தர உள்ள இந்த நல்ல வாய்ப்பான ஓட்டை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடிநீர் வசதியை கூட சரிவர செய்ய தவறிய அரசை மாற்ற வேண்டும்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். உங்களின் விருப்பமே எனது விருப்பம். இங்குள்ள தென்பெண்ணை ஆற்று நீரில் கழிவுநீர் கலந்து மாசடைந்து இருக்கிறது. மதிய உணவில் மாங்கூழ் தருவோம் என்ற தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் கேட்கும் அனைத்து கோரிக்கைகளையும் அரசு செய்ய முடியும். ஆனால் அரசு எதையும் செய்ய முன் வரவில்லை. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை.

இந்த மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் ஜவுளித்துறை முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. வருகிற தேர்தலில் முதல் முறையாக ஓட்டு போடுபவர்கள் சரியாக ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினரும், மண்டல பொறுப்பாளருமான வக்கீல் டி.ராஜசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் முருகேசன், வடிவேல், தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் கமல்பாலா, சத்யநாராயணா, ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story