போதிய டாக்டர்கள் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள்
அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பால் அவதியடையும் மக்கள் வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர். பலரும் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீப காலமாக ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக பொதுமக்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பணியில் இருக்கும் டாக்டர்களும் சிறப்பு முகாம், விழிப்புணர்வு முகாம் என்று வேறு இடங்களுக்கு செல்வதால் அந்தந்த ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது.
மானாமதுரை அருகே முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 300–க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 50–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மேட்டுமடை, வாகுடி, இடைக்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் சிகிச்சைக்காக தினசரி வருகின்றனர். அவ்வாறு வரும் மக்கள் ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
இதேபோல் நேற்று முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது பெண்களில் சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
எனவே மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு போதிய டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.