பாம்பன் குந்துகால் பகுதியில் தொடரும் மணல் திருட்டு; அதிகாரிகளை திசை திருப்பி தப்பியோட்டம்
பாம்பன் குந்துகால் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற அதிகாரிகளை திசை திருப்பி விட்டு பறிமுதல் செய்த வாகனங்களை எடுத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளை நிறுத்துவதற்கு வசதியாக ரூ.70 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் ஒருவரின் விவசாய நிலத்தில் இருந்தும், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரூ.70 கோடி மதிப்பிலான இந்த துறைமுகம் கட்டுமான பணி தரமில்லாமல் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கடற்கரை பகுதியில் மணல் அள்ளுவதற்கு கனிம வளத்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று குந்துகால் பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக கனிம வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கனிமவள உதவி இயக்குனர் லலிதா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து ஜே.சி.பி. மற்றும் டிராக்டர்களை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். இருப்பினும் அதிகாரிகள் விரட்டி சென்றதில் 7 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜே.சி.பி.யை விட்டுவிட்டு டிரைவர்கள் தப்பியோடி விட்டனர். அதில் ஒருவர் மட்டும் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். உடனே அந்த டிராக்டர்கள் மற்றும் ஜே.சி.பி. வாகனத்தில் சாவிகளை கனிம வளத்துறையினர் எடுத்து வைத்துக்கொண்டனர். பின்பு பிடிபட்ட டிரைவரிடம் விசாரித்த போது மணல் அள்ளுவதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தை காண்பிப்பதாகவும் கூறி அங்கும் இங்குமாக அலைக்கழித்துள்ளார். அந்த சமயத்தில் அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த டிராக்டர்களை அதன் டிரைவர்கள் நைசாக எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிடிபட்ட நபரும் தப்பி ஓடிவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் ஒரே ஒரு டிராக்டரை மட்டும் பறிமுதல் செய்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கனிம வளத்துறை அதிகாரி கூறும்போது, மணல் கொள்ளையை தடுப்பதில் போலீசார் எங்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை. தங்களது பொறுப்புகளை தட்டிக்கழிக்கின்றனர். மேலும் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உள்ளது. இதேபோன்று போலீசார் நடந்து கொண்டால் மணல் கொள்ளையை தடுப்பது மிகவும் சிரமம். இதுபற்றி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எங்களை ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்ற வாகனங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். அவற்றின் மீது வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்படும். இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மணல் அள்ளியுள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே 2 டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.