வேளாங்கண்ணி லாட்ஜில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


வேளாங்கண்ணி லாட்ஜில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2018 11:15 PM GMT (Updated: 10 Nov 2018 7:15 PM GMT)

வேளாங்கண்ணி லாட்ஜில், தூக்குப்போட்டு, போலீஸ் காரர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் விவேக்(வயது 25). இவர் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ் காரராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்தார். அங்கு உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று முன்தினம் இரவு அந்த லாட்ஜில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர், தங்கும் நேரம் முடிவடைந்ததால் அறையை காலிசெய்ய சொல்வதற்காக விவேக் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து மேலாளர் அந்தோணி குரோஸ் மற்றும் பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு விவேக் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து வேளாங்கண்ணி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவித்தபோது, விவேக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் விவேக் கடைக்கு சென்று புதிய புடவை ஒன்று வாங்கி வந்துள்ளார். அந்த புடவையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினர்.

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story